கர்நாடகா | முடா வழக்கில் சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!
கர்நாடக மாநிலம் மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டதாக கடந்த ஆண்டு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில், முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Mysuru Urban Development Authority (MUDA) ), சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது. இந்த இடம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பு என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல்வர் சித்தராமையா விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், முடா வழக்கில் சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை, "முடா வழக்கு தொடர்பாக சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சித்தராமையா தவிர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் இருந்து ரூ.400 கோடி அளவுக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.