காவிரி மேலாண்மை வாரியத்துக்காக குரல் தரும் கர்நாடக வேட்பாளர்
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் கூறிவரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கட்டாயத் தேவை என்று குரல் கொடுக்கிறார் கர்நாடகத்தின் மேலக்கோட்டை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஒருவர். இவரை ஆதரித்து காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளே தங்கள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை.
மாவிலைத்தோரணங்கள், மாலையிட்டு மரியாதை என மக்கள் அன்போடு வரவேற்கிறார்கள் சுயேட்சை வேட்பாளர் தர்ஷன் புத்தன்னையாவை. 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் நிறுவனம் நடத்திவரும் தர்ஷன் புத்தன்னையா கர்நாடக அரசியல் களம் கண்டதற்கு ஒரே காரணம் அவரது தந்தை புத்தன்னையாதான். 2013 ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டம் மேலக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற புத்தன்னையா, 3 மாதங்களுக்கு முன் காலமானார். அவர் மீது மக்கள் கொண்ட அன்பைக்கண்ட மகன் தர்ஷன், தந்தை விட்டுச்சென்ற மக்கள் பணிக்காக அரசியல் களம் கண்டுள்ளதாக கூறுகிறார்
இதுதொடர்பாக தர்ஷன் புத்தன்னையா கூறுகையில், “தந்தையின் இறுதிச்சடங்கின்போது லட்சக்கணக்கானோர் திரண்டு விட்டனர். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துவிட்டனர். அவர் விவசாயிகளிடம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி அப்போதுதான் தெரியவந்தது. அதற்கு முன் அரசியலுக்கு வர விரும்பியதில்லை. தந்தையின் மறைவுக்குப்பின் மக்கள் காட்டிய அன்புதான் இந்த முடிவை எடுக்க வைத்தது. அதுதான் 15 ஆண்டுகால அமெரிக்க வாழ்க்கையை உதற வைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. அதன் மூலம்தான் இரு மாநில விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இருமாநில விவசாயிகளும் பிரச்னையை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
தர்ஷன் புத்தன்னையாவை ஆதரிக்கும் விதமாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை. தர்ஷனை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா கட்சி மட்டும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
( தகவல்கள்: ரமேஷ் - செய்தியாளர் )

