இன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்! 

இன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்! 

இன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்! 
Published on

கர்நாடகாவில் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 14 எம் எல் ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று அமைச்சரான நாகராஜும், ஜிக்மள்ளாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதாகரும், சட்டப்பேரவைக்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம் எல் ஏக்கள் என ராஜினாமா கடிதம் அளித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தவிர இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஏற்கனவே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 10 பேர் கர்நாடகா சபாநாயகர் வேண்டுமென்றே தங்கள் ராஜினாமாவை ஏற்க மறுப்பதாகக் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆட்சியில் தொடர 113 எம் எல் ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 16 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், கர்நாடக அரசுக்கு மொத்தம் 100 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கும். பாரதிய ஜனதாவுக்கு சுயேட்சைகள் இருவரின் ஆதரவையும் சேர்த்து, 107 எம் எல் ஏக்கள் இருப்பார்கள்.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று 11 மணிக்கு சட்டப்பேரவையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை, தங்களது கட்சி தலைமையிடம் மட்டுமே அளித்திருப்பதால் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டபேரவை அமைந்துள்ள விதான் சவுதாவை சுற்றிலும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, இன்று முதல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பெங்களூரு நகர காவல் ஆணையர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com