கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி
கர்நாடகாவில் இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் குமாரசாமி, ராம்நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி சார்பில், குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டார்.
இதேபோல் ஜம்கண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ராம்நகர் தொகுதியில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில், அனிதா குமாரசாமி வெற்றி பெற்றார்.
இதேபோல் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் சித்து யமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றியை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.