காங்கிரஸ் அபார வெற்றி.. பிரசாந்த் கிஷோரையே மிஞ்சிய புதிய தேர்தல் வியூகர்! யார் இந்த சுனில் கனுகோலு?

கர்நாட மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வென்றதற்கு தேர்தல் பிரசார வியூகர் சுனில் கனுகோலு வகுத்துக் கொடுத்த ஆலோசனைகளே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
சுனில் கனுகோலு,
சுனில் கனுகோலு, twitter pages

கடந்த 6 மாத காலமாகக் கடும் வெயிலைவிட, அதிகமாய்க் கொதித்த கர்நாடக தேர்தல் களத்தில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மூலம் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் மட்டுமே தேவையான நிலையில், 135-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து நாளை அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், விரைவில் அக்கட்சி ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸின் வெற்றிக்குப் பணியாற்றிய தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு பற்றி அதிகம் பேசப்படுகிறது.

தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் பிரசார வியூகர், வல்லுநர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோருக்கு அடுத்தப்படியாக சுனில் கனுகோலு, இன்று அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். அதற்குக் காரணம் கர்நாடகாவில் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை அரியணையில் ஏற்றியிருப்பதுதான்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசார வியூகரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றுவார் எனப் பேசப்பட்டது. ஆனால், இறுதியில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அக்கட்சிக்கு மறுப்பு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில்தான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2024ஆம் ஆண்டிற்கான 2 உயர்மட்ட குழுவில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை நியமித்தார். அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குழுவில் பணியாற்றுவதற்குத் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலுவையும் நியமித்தார். அதற்கு முன்பாக, தற்போதைய கர்நாடகத் தேர்தல் பணிக்குழுவிலும் நியமிக்கப்பட்டார், சுனில் கனுகோலு.

யார் இந்த சுனில் கனுகோலு?

பிரசாந்த் கிஷோரை போல் பெரிய அளவில் பேசப்படாதவர் சுனில் கனுகோலு. அதாவது சமூக ஊடகங்களில் இருந்து கொஞ்சம் விலகி நின்றவர். என்றாலும், 2014ஆம் ஆண்டுவரை பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றியவர் இந்த சுனில். ஆனாலும், இவருக்கும் கிஷோருக்கும் செயல் முறைகள் பெரிய அளவில் வேறுபடுகின்றன. குறிப்பாக, 2016இல் திமுக தொடங்கிய ‘நமக்கு நாமே’ பிரசார பயணத்துக்கு சுனிலின் ஆலோசனைதான் பெரும் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் கொடுத்த இந்த ஐடியாதான், மு.க.ஸ்டாலினின் இமேஜை மக்கள் மத்தியில் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தேர்தலுக்கு முன்பு ஓர் அணியை உருவாக்கும் சுனில், அதைத் தேர்தலுக்குப் பிறகும் வலிமையாக வைக்கும் அளவுக்கு வலிமை படைத்தவர் எனப் பலரால் கூறப்படுகிறது.

திமுகவுக்காக பணியாற்றிய சுனில்!

இதனால்தான் பிரசாந்த் கிஷோரிடமிருந்து அவர் விலகி நிற்கிறார் என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு திமுகவுக்காக சுனில் பணியாற்றியபோதும் அந்த ஆண்டு, திமுக தேர்தலில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, சுனிலின், தேர்தல் பயணம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிப்ரவரி 2018 வரை நீடித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் திமுக முகாமுக்குத் திரும்பினார். 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார். ஆனால், திமுக தலைமை, பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியதையடுத்து, கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சுனில் திமுகவில் இருந்து பிரிந்தார். பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதை சுனில் ஏற்கவில்லை. அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோரும் சுனிலுடன் பணியாற்ற ஒப்புக்கொள்ளமாட்டார் என்று திமுக உணர்ந்திருந்தது.

அதேநேரத்தில், அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார், சுனில். ஆனாலும், அதிமுகவின் தோல்வி உறுதியானது. இருந்தாலும், சுனில் தற்போதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சுனில், தென்னிந்தியாவில் பாஜகவை வீழ்த்தியது எப்படி?

இந்த நிலையில்தான், காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் சுனிலை சந்தித்தனர். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சுனில் கனுகோலுவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்திற்கு கர்நாடக பிரசாரத்திற்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் கொடுத்தது. அதன் விளைவு, அவர்களின் நம்பிக்கையை வெற்றிபெற வைத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணம், சுனில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவருக்குப் பல மொழிகள் தெரியும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவின் அரசியலையும் உள்ளுணர்வையும் நன்கு புரிந்துகொண்டதால்தான், அதைத் தன்னுடைய செயல்கள் மூலம் மாற்றிக் காட்டி காங்கிரஸுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இவர், தென்னிந்தியாவின் தேர்தல் வியூகம் மட்டுமல்ல, வட இந்தியாவின் நாடித் துடிப்பையும் நன்கறிந்தவர் என்கின்றனர். மேலும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் நடைப்பயணமே, சுனில் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தான் என்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குழுவில் இடம்பிடித்துள்ள தேர்தல் நிபுணர் சுனில் கனுகோலு, தனது மைண்ட்சேர் அனலிட்டிக்ஸ் குழுவுடன் காங்கிரஸ் கட்சிக்காகக் களம் இறங்குகிறார். அவருடைய இந்த வெற்றிக்கு, அவர் குழுவில் உள்ளவர்களின் பலமே என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com