கர்நாடகாவில் காங், மஜத எம்.ஏல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுப்பு
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏக்கள் 13 பேரின் ராஜினாமாவை ஏற்க, சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்துவிட்டார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சிகளைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் அளித்த நிலையில் அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகிய இருவரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 116 ஆக குறைந்துள்ளது.
இதுதவிர ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களின் முடிவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 103 ஆக குறையும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக அதிகரிக்கும்.
இந்நிலையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட அரசு பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. அதே நேரம் 13 எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுடன் இணைந்து முதல்வர் குமாரசாமி கடைசி நேர காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார். குமாரசாமி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 21 அமைச்சர்களும் பதவி விலகிவிட்டனர். ராஜினா மா செய்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க ஏதுவாகவே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் 13 பேரும் மும்பையில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 13 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்துவிட்டார்.