கடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் அதிருப்தியால் ஆட்சி ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மஜத உட்பட இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால், பாஜக ஆட்சியை கைப்பற்ற கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் நீதிமன்றம் சென்று, சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்கும் விஷயத்தில் மட்டுமே தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் எம்.எல்.ஏக்கள் அவைக்கு வருவதும், வராததும் அவர்கள் விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அது முடிந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடக ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துமாறு சபாநாயகருக்கு அறிவுறுத்திருந்தார். இந்நிலையில் அவை நாளை காலைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா, அவை விட்டு செல்லமாட்டோம், இரவு முழுக்க இங்கே இருப்போம் என தெரிவித்துள்ளார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.