கடைசி நேரத்தில் வந்த காங்., எம்எல்ஏ: பதவியேற்காத 26 பேர்

கடைசி நேரத்தில் வந்த காங்., எம்எல்ஏ: பதவியேற்காத 26 பேர்

கடைசி நேரத்தில் வந்த காங்., எம்எல்ஏ: பதவியேற்காத 26 பேர்
Published on

கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏக்களுக்கு பதவியேற்பு செய்யும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கியது. பதவியேற்பு நிகழ்வில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானதும் இன்றைய தினத்தின் பரபரப்பு தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. இருப்பினும் இறுதி நேரத்தில், பிரதாப் கவுடா  அவைக்கு வந்து பதவியேற்றுக் கொண்டு விட்டார். எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் தான் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். 

இதனிடையே, பாஜக எம்.எல்.ஏவும் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரருமான சோமசேகர் ரெட்டி அவைக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சோமசேகர் பிடியில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹோட்டலில் இருப்பதாக தகவல் வெளியானது. புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தாஜ் ஃபிஞ்சு ஹோட்டலுக்கு டிஜிபி தலைமையில் போலீஸ் விரைந்துள்ளார். 

தொடக்கத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா ரூ.15 கோடி பேரம் பேசியதாக புகார் எழுந்தது. ரூ.15 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பாஜக எம்எல்ஏ கூறியதாக தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ வி.எஸ்.உக்ரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏவின் மனைவிக்கு பாஜக எம்எல்ஏ போன் செய்து எடியூரப்பாவுக்கு வாக்களிக்க சொன்னதாக கூறினார். 

பாஜகவுக்கு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், கர்நாடகவில் ஏற்கனவே மேற்கொண்ட ‘ஆபரேஷன் தாமரை’ என்ற வியூகத்தை அமித்ஷாவும், மோடியும் செயல்படுத்துவார்கள் என்று பேசப்பட்டது. அப்போது, காங்கிரஸ் மற்றும் மஜத தரப்பிலும் எதிர் சவால் விடுக்கப்பட்டது. பாஜக ஒரு எம்.எல்.ஏவை இழுத்தால் நாங்கள் இரண்டு எம்.எல்.ஏக்களை இழுப்போம் என குமாரசாமி கூறினார். காங்கிரஸ் கட்சியும் எங்கள் பக்கம் வருவதற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் தயாராக இருப்பதாக கூறியது. 

என்ன நடக்கும் என்பது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் தெரியும். இதுவரை காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக பேரம் பேசி வருவதாக தான் அந்தக் கட்சியினர் புகார் தெரிவிக்கும் செய்திகள் தான் வெளியாகி வருகிறது. மதியம் 1.30 மணி நிலவரப்படி கர்நாடக சட்டசபையில் 193 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்டுள்ளார். உணவு இடைவெளிக்காக மதியம் 3.30 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 221 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் கே.ஜி.போபையா சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார். எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதனால், இன்று 219 எம்.எல்.ஏக்கள் பதவியேற்க வேண்டும். இதுவரை 193 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுள்ள நிலையில், மீதமுள்ள 26 பேர் பதவியேற்க வேண்டியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com