கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் - மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 15க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். சபாநாயகர் அலுவலகத்தில் இல்லாததால், அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை அலுவலகத்தில் அளித்தனர். ஆனால், ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து, தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக் கோரி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது ஜுலை 16 ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவை தலைவருக்கு உத்தரவிட முடியாது எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மனுக்கள் மீது ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இருதரப்பிலும் நியாயம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நாளை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இன்று வழங்கப்படும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.