கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பை முடிக்க கெடு!
கர்நாடகாவில், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க ஆளும் தரப்புக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம், அம்மாநில சட்டப்பேரவையில் 3 வது நாளாக நேற்றும் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் விவாதம் நடத்த வேண்டியிருப்பதால் வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசம் கோரினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டது.
எனினும் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியதென சபாநாயகர் ரமேஷ்குமார் உறுதிபட தெரிவித்தார். தங்கள் கோரிக்கையை ஏற்குமாறு கூறி, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்கள், அவைக்குள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாலை வரை கூட காத்திருக்கத் தயார் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறும் சபாநாயகர் கூறினார்.
விவாதம், எதிர்ப்பு, அமளி, தர்ணா என இரவு 11.40 வரை பேரவை நீடித்தது. இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குள் விவாதத்தை முடித்து, 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டுமென ஆணையிட்ட சபாநாயகர், அவையை ஒத்தைவைத்தார்.
இதற்கிடையில் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது போன்ற ஒரு கடிதம் வெளியானது. ஆனால் அக்கடிதம் போலியானது என்றும் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் குமாரசாமி குற்றஞ்சாட்டினார். இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.