’சுயமரியாதை இல்லாதவர்கள்’: ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை சாடிய குமாரசாமி
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் கடுமையாக சாடினார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். அதனை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அவ்வாறு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது.
இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்க ளும் அறிவித்து விட்டனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்படுகிறது. எனவே குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த பரபரப்புக்கிடையே கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங் கியது. முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் காரசாரமாக பேசிவருகிறார்.
அவர் கூறும்போது, ’சட்டப்பேரவையில் விவாதம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடியூரப்பாவுக்கு கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறும்போது, ’’கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனே, இல்லையா என்று கேள்விக்கு பதில் அளிக்க நான் வரவில்லை. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல் படுகின்றனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள்’’ என்ற அவர், இன்றைக்குள் நம்பிக்கை வாக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.

