காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏக்களான ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல், எம்.எல்.ஏக்களை விலை பேசுதல் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி பேசியிருந்தபோது, “கர்நாடகாவில் தமது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாஜகவுடன் சேர்வதாக கூறப்பட்ட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தன்னிடம் தெரிவித்துவிட்டுதான் மும்பை சென்றனர். அவர்கள் தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பேரின் வாபஸினால் கர்நாடக அரசின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 119ல் இருந்து 117 ஆக குறைந்தது. சபாநாயகருடன் சேர்த்தால் மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இதுகுறித்த பிரச்னையில் சுமூகத் தீர்வு காண பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கூட்டத்தில் 76 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாகவும், கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். கர்நாடகாவில் எங்களுடைய அரசை கவிழ்க்க பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் எங்களுடைய எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு விலை பேசுவதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க ரூ.50 - 70 கோடி வரை பாஜகவினர் பேரம் பேசுவதாக குற்றம்சாட்டினார்.
கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.