கார்கில் போர்: வெற்றி பெற்ற 'ஆபரேஷன் விஜய்'

கார்கில் போர்: வெற்றி பெற்ற 'ஆபரேஷன் விஜய்'

கார்கில் போர்: வெற்றி பெற்ற 'ஆபரேஷன் விஜய்'
Published on

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 18-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

1999-ம் ஆண்டு மே மாத தொடக்கத்‌தில், காஷ்மீர் மாநிலத்தின் கா‌ர்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும், பல பகுதிகளில் முகாமிட்டனர். கால்நடை மேய்ச்சலுக்குச் சென்றோர் மூலம் தகவலறிந்த இந்திய ராணுவம், ‌ஆய்வு செய்ய ராணுவ வீரர்களை அனுப்பியது. ‌அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்‌துக் கொன்றனர். இதையடுத்து, 1999 மே 26-ம் தேதி இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய‌து. ஆப்ரேஷன் விஜய் எனப் பெயர் சூட்டப்பட்ட ராணுவ தாக்குதல் நடவடிக்கை, உச்சத்தைத் தொட்டது.

‌மிக உயரமான மலைப்பகுதியில் 60 நாள்களாக நடைபெற்ற தாக்குதல்களின் முடிவில், ஊடுருவல்காரர்களிடம் இருந்து கார்கில் பகுதியை இந்திய ராணுவம் மீட்டது. படிப்படி‌யாக அனைத்து நிலைகளையும் கைப்பற்றிய பிறகு, கார்கில் போர் முடிவுற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஜூலை 26-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த போரில் இந்திய தரப்பில் 527 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்து. பாகிஸ்தான் தரப்பில் சுமார் 450 பேர் ‌வரை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கார்கில் போர் முடிவுக்கு வந்த தினத்தை கார்கில் விஜய் திவாஸ் என அறிவித்து, போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதையொட்டி, காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டின் கவுரவத்திற்காகவும், மக்களின் பாதுகாப்புகாகவும் போராடிய வீரர்களை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார். கார்கில் வெற்றி தினம் ராணுவத்தின் ஆற்றலையும், இந்தியாவை பாதுகாப்பதில் அவர்கள் செய்யும் தியாகங்களையும் நமக்கு நினைவுபடுத்துவதாகவும் கூறினார்.

அதேபோல,‌ புதுச்சேரியில் உள்ள கார்கில் நினைவு தூணில் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்ச‌லி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com