மிரட்டல் விடுத்த காரைக்கால் பெண் தாதா: தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்
மதுபான உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் வெங்கடேசப் பெருமாள். இவர் காரைக்கால் சர்ச் வீதியில் மதுபானங்களை மொத்த விற்பனைக்கு விற்று வந்தார். இவரது கடையை நாகராஜ் என்பவர் நடத்திவந்தார். நாகராஜ்க்கும் வெங்கடேசப் பெருமாளுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நாகராஜுக்கு ஆதரவாக காரைக்காலைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகளான திரிலோக சந்திரன், பாலமுருகன் ஆகியோர், வெங்கடேசப் பெருமாளை நாகராஜ் கேட்கும் பணத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து வெங்கடேசப் பெருமாள் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீர வல்லபனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபானக்கடை உரிமையாளரை மிரட்டிய நாகராஜன், திரிலோக சந்திரன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த பெண் தாதா எழிலரசி தலைமறைவாக உள்ளார். எழிலரசி கடந்த சில நாட்களுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.