2 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட கார்... 'வசமாக சிக்கிய' போலீஸ் அதிகாரி...- உ.பி 'சம்பவம்'

2 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட கார்... 'வசமாக சிக்கிய' போலீஸ் அதிகாரி...- உ.பி 'சம்பவம்'

2 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட கார்... 'வசமாக சிக்கிய' போலீஸ் அதிகாரி...- உ.பி 'சம்பவம்'
Published on

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கார் ஒன்றை, போலீஸ் அதிகாரி ஒருவர் பயன்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

கான்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த காரை தொலைத்த ஓமேந்திர சோனி என்பவருக்கு, ஒரு கார் சர்வீஸ் சென்டரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. சோனியிடம் மறுமுனையில் பேசிய சர்வீஸ் சென்டர் ஊழியர்,  ‘’கார் நன்றாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா? உங்களுக்கு திருப்தியா?” என்பது போன்ற கேள்விகளை சோனியிடம் கேட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தனது கார் பற்றிய அனைத்து விபரங்களையும் சர்வீஸ் சென்டர் ஊழியர் துல்லியமாக கூறியதால், ஓமேந்திர சோனி அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார். அதன்பின்னர் 'காரை சர்வீஸ் செய்தது யார்?' என்பது போன்ற கூடுதல் தகவல்களை அவர் கேட்டுள்ளார்.

அப்போது, பைத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஹெச்.ஓ-ஆக (SHO - Station House Officer) பணியாற்றிவரும் கயூசலேந்திர பிரதாப் சிங் என்பவரிடம் காரை திரும்ப ஒப்படைத்ததாக சர்வீஸ் சென்டர் ஊழியர் கூறியுள்ளார். 

காவல் நிலையத்திற்கு சென்று விசாரிக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட காரை கயூசலேந்திர பிரதாப் சிங் தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. கார் திருடப்பட்ட சமயத்திலேயே, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதன் உரிமையாளரான ஓமேந்திர சோனி இதுதொடர்பாக பாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காரை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக ஒரு சர்வீஸ் சென்டரில் விட்டிருந்தபோது அங்கிருந்து கார் திருடப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் திருடுபோன காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், மேற்கொண்டு விசாரணை செய்யாமல் இந்த வழக்கை காவல் துறையினர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தபோது, இந்த காரை கண்டுபிடித்தாக எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்பதால், அந்தக் காரை அவர் பறிமுதல் செய்துள்ளார். அதன்பின் தனது சொந்த உபயோகத்திற்கு அவர் காரை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் எஸ்ஹெச்ஓ கயூசலேந்திர பிரதாப் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com