தர்ஷன் ஜாமீன் விவகாரம் | “ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?” - நடிகர் ரம்யா ஆதங்கம்
நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதன் பேரில் ரேணுகாசாமி என்ற ரசிகர் கன்னட நடிகர் தர்ஷனின் ஆட்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதன் பேரில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தது.
இதற்கு கன்னட திரைப்பட நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பந்தனா, “கொல்லப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், ரம்யாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தவிர, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பினர். இதுகுறித்த 43 சமூக ஊடகக் கணக்குகள் மீது பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிம் ரம்யா புகார் அளித்தார். இதனிடையே கர்நாடக மகளிர் ஆணையம், ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதேபோல் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகை ரம்யா, NDTVக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நீதி தேடும் இந்திய மக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நம்பிக்கைக் கதிர் என்று நான் சொன்னேன். அவ்வளவுதான். நான் நடிகரைப் பற்றிக் கூட குறிப்பிடவில்லை. அதைப் பதிவுசெய்த பிறகு, எனக்கு இடைவிடாத ட்ரோலிங் வந்தது. எனக்கு நிறைய வீடியோ அழைப்புகள் மற்றும் ஆடியோ அழைப்புகள் வந்தன. அவை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பொது நபராக, மக்கள் உங்களை விமர்சிக்கிறார்கள். சில சமயங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் செய்கிறார்கள். உண்மையில் நானும் என்னைப் பற்றிய இதுபோன்ற மீம்ஸ்களைப் பார்த்து சிரித்திருக்கிறேன். ஆனால் தற்போதைய ட்ரோலிங் வேறொரு வகையில் இருந்தது. அவர்கள் எனக்கு இதைச் செய்வதால், பெண்கள் மற்றும் சட்டத்தின் மீது முழுமையான அவமதிப்பைக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எந்த பயமும் இல்லை.
அவர்களால் எனக்கு இதைச் செய்ய முடிந்தால், உண்மைக்காக நிற்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் என்ன அனுப்புவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் (தர்ஷன்) முன்னதாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால், ரேணுகாசாமி வழக்கு நடந்திருக்காது. ஏனென்றால் அவர் நடிகரின் ரசிகர். இதுபோன்ற செய்திகளை அனுப்ப இந்த ரசிகர்கள் எப்படித் துணிகிறார்கள் என்பதையும், இந்த மனநிலையை இது உங்களுக்குக் காட்டுகிறது. அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால், இன்று நாம் இருக்கும் நிலையில் இருந்திருக்க மாட்டோம் என்று நான் நினைக்கிறேன். இது சரியில்லை என்று அவர் தனது ரசிகர்களிடம் சொல்ல இன்னும் நேரமிருக்கிறது. ஏனென்றால் ரேணுகாசாமி அனுப்பியதற்கும் அவரது ரசிகர்கள் அனுப்புவதற்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அது தவறு என்று நீங்கள் நினைத்தால், இது ஏன் தவறல்ல" என அதில் கேட்டுள்ளார்.