"உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவதா.. வெட்கம்!"- மக்களவையில் வெளுத்துவாங்கிய கனிமொழி!

"உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவதா.. வெட்கம்!"- மக்களவையில் வெளுத்துவாங்கிய கனிமொழி!
"உடன்கட்டை ஏறுவதை பெருமையாக பேசுவதா.. வெட்கம்!"- மக்களவையில் வெளுத்துவாங்கிய கனிமொழி!

மக்களவை கூடியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி கனிமொழி, Alice in Wonderland திரைப்படத்தை குறிப்பிட்டு மத்திய அரசை விளாசியுள்ளார். அவர் பேசியவற்றின் முக்கிய கருத்துகள் இங்கே:

“இந்த நாடு, எத்தனையோ சம்பவங்களை தாண்டித்தான் வந்திருக்கிறது. இந்நாட்டின் மக்கள் இன்னும் போராடிக்கொண்டேதான் இருப்பர். மாநில அரசின் அதிகாரத்தை குறைக்க நீங்கள் (மத்திய அரசு) தொடர்ந்து முயற்சித்துக்கொண்டேதான் இருக்கின்றீர்கள். மேலும் நாங்கள் செய்யும் வேலைகளை முறையற்றதாக்கவும் நீங்கள் முயல்கின்றீர்கள். எங்களை அவமானப்படுத்துவதையும்கூட தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள். ஒரு வளமான மாநிலம் என்றால் என்ன, இலவசங்கள் என்பது எதற்காக என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவும் மறுத்துக்கொண்டே இருக்கின்றீர்கள். எங்களை தொடர்ந்து சில பெயர்களை வைத்து நீங்கள் அழைக்கின்றீர்கள். ஆனால், நாங்கள்…. எங்களால் சமூகநீதிக்காகவும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவும் ஒரு மாடலை உருவாக்க முடியுமென உங்களுக்கு நிரூபித்துள்ளோம். இவையெல்லாம் நீங்கள் தோல்வியடைந்த மாடல்களாகும்!

துரதிஷ்டவசமாக… 1967 நவம்பரில் நடந்த மக்களவையில் எங்களின் தலைவரான பேராசிரியர் அன்பழகன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அதாவது, `ஆளுநர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, முடக்கும் கருவிகளாக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றனர்’ என்று பேசினார் அவர். அவரது அந்த வரியை இப்போது மேற்கோள்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு ஆளுநர், கிட்டத்தட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவற்றில் ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மற்றும் அதன் நெறிமுறைகள் போன்ற மிக மிக முக்கியமான பல மசோக்கள் உள்ளன.

இந்த நிலை, தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், நாகலாந்து, தெலங்கானா போன்ற இடங்களில் என்ன நடந்தது என்றும் நாம் பார்த்தோம்! கேரளாவில், அமைச்சர்களை பின்வாங்குமாறு ஆளுநர் மிரட்டவே செய்தார். பாஜக இல்லாத மாநிலங்களிலெல்லாம் இப்படித்தான் நிலை இருக்கிறது; அங்கெல்லாம் எங்களை போல ஆளுநர்களுடன் போராட வேண்டியுள்ளது.

சட்டமேதை அம்பேத்கர், தனது அரசியலமைப்பு சட்டத்தில் `ஆளுநர் தனிப்பட்டு சுயமாக எந்த விருப்பும் கொண்டிருக்க முடியாது. மாநில அரசின் அமைச்சர்கள் சொல்வதை கேட்க அதன்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டியவர்’ என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதை, பாஜக அல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் தெளிவாக படிக்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அல்லது பரிந்துரையாவது செய்யவேண்டும். கூட்டாட்சி என்றால் என்ன என்பதை, இந்த நாடு எதை சார்ந்துள்ளது என்பதை அவர்களுக்கு இந்த மத்திய அரசு புரியவைக்கவாவது வேண்டும். இதில் இன்னும் சிக்கல் என்னவென்றால், நீங்களே எதையும் கேட்பதில்லை. ராகுல் காந்தி எம்.பி, இன்று மக்களவையில் பேசுகையில் உங்களின் தொடர் இடையூறுகள் மூலம் அதை கண்கூடாக நாங்கள் பார்த்தோம். எதிரில் இருப்பவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்பது, உங்களுக்கு தெரியாத விஷயம் என்பதால், நீங்கள் அதை செய்வதேயில்லை.

இந்த வருடம் தேர்தல் எதுவும் வரப்போவதில்லை என்பதால், திருவள்ளுவரை பற்றி பேச நீங்கள் மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு திருக்குறள் சொல்ல நினைக்கிறேன்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்

- இதற்கு நானே விளக்கமும் சொல்கிறேன். ஏனெனில் நீங்கள் எந்த தென்னிந்திய மொழியை புரிந்துக்கொள்ளவோ அறிந்துகொள்ளவோ முயல்வதேயில்லை. இந்தியை திணிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கின்றீர்கள். இதன் பொருள் ` குறையை உணர்த்தும் நேர்மையானவர் இல்லாத ஒரு அரசனின் அரசு, முடிவுக்கு வர எதுவும் தேவையில்லை. தானாகவே அது கெடும்’. ஆகவே மக்கள் என்ன நினைக்கிறார்கள், எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது, ஊடகங்கள் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் கேட்க மறுத்தால், உங்களை அழிக்க எதிரியே தேவையில்லை. நீங்களே போதும்

இந்த அரசு, நாடாளுமன்றத்தின் உள்ளேயே வெளியேயும் பேச்சுரிமையை பறிக்கிறது. மீறி பேசுவோர் மீது கைகளில் உள்ள அதிகாரத்தின் மூலம் அச்சுறுத்தலை தொடுக்கிறது. இந்த அரசு ஆரோக்கிய வாதத்தை கண்முன்னேயே தடுக்கிறது. மக்களை பேசவிடாமல் தடுக்கிறது. பயத்தை மட்டுமே கொடுத்துக்கொண்டு, அதைவைத்து ஆட்சியை நடத்த முடியாது” என்றார்.

தொடர்ந்து இன்று நடந்த மக்களவை கூட்டத்தில், குடியரசு தலைவரின் உரையை பற்றி பேசுகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையில் இருந்து ஒரு வாக்கியத்தை மேற்கோள்காட்டி, “இந்தியா இனி கொள்கை முடக்கத்தால் பாதிக்கப்படுவதில்லை. மாறாக,  சர்வாதிகார கொள்கை வகுப்பை நோக்கி நகர்ந்துள்ளது” என்று கடுமையாக கூறினார்.

மேலும், “சில நேரங்களில் Alice in Wonderland எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பாராளுமன்றத்தில் இருக்கிறேனா அல்லது அப்படத்தின் ராணியின் அரசவையில் இருக்கிறேனா என தெரியவில்லை. அந்த ராணிக்குதான், ஒரு தண்டனையை நிறைவேற்ற அவளுக்கு எந்த காரணமும் தேவையில்லை, அவளால் காரணத்தை கேட்கவும் முடியாது.

பாராளுமன்றம் இங்கு சட்டம் இயற்ற உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆனால் இன்னொருபக்கம், அரசு அனைத்து வணிகங்களையும் நம் மீது திணிப்பதை நம்புகிறது. அரசின் எந்த கொள்கைக்கும், அதை நடைமுறைப்படுத்தும் முன்னர் ஆலோசனை என்பதே இருப்பதில்லை. ஒவ்வொருமுறையும், பாராளுமன்ற குழு ஏதாவதொன்றை பரிந்துரைக்கிறது.

இங்கு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் எல்லாம் தலைகீழாக உள்ளன. ஒவ்வொரு முறையும், அமல்படுத்தப்பட்ட பின்னர் நாங்கள் பரிந்துரைப்பதை மீண்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளது" என கறாராக பேசினார். இதன்பின்னர் உடன்கட்டை ஏறுவதை  பாஜக எம்பி பெருமையாக பேசியதற்கு பதிலளித்த அவர், “இந்த தேசத்தின் பெருமை குறித்து பேசும் போது கவுரவத்தின் பெயரில் பெண்கள் தீயில் தள்ளப்பட்டதை உடன்கட்டை ஏற்றபட்டதை பெருமையாக பேசுகின்றனர். இதனை கண்டு நாங்கள் அவமானத்தில் தலை குனிகிறோம்” என கூறினார்.

முன்னதாக மக்களவை கூடியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் தொகுதி பாஜக எம்பி ஜோஷி, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். தனது சொந்த மாநிலத்தின் பெருமைகளை குறிப்பிட்டு பேசிய ஜோஷி, “முகமதிய மன்னர் அலாவுதீன் கில்ஜியிடம் தங்கள் முகத்தைக் காட்டுவதற்கு பதிலாக, 1,600 பெண்கள் நெருப்பில் குதித்த தேசத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்” என பெருமையுடன் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com