சிபிஐ மேல்முறையீடு செய்யும், அதை எதிர்கொள்வோம்: கனிமொழி தரப்பு வக்கீல்
2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ கண்டிப்பாக மேல்முறையீடு செய்யும் என்றும், அதையும் எதிர்கொள்வோம் என்று கனிமொழி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவிப்பதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யோகப் பேட்டியளித்த கனிமொழியின் வக்கீல் பாலாஜி, “ சிபிஐ தொடர்ந்த வழக்கில் எதையும் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ தொடர்ந்தது தான் முக்கிய வழக்கு என்பதால் அதில் விடுதலை பெற்றவுடன் மற்ற அனைத்து வழக்களிலும் விடுதலை கிடைத்துவிடும். 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் ஆரம்பம் முதலே சிபிஐயிடம் யாரும் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதனால் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் வரும் என உறுதியாக இருந்தோம். அதற்கேற்றவாறே தற்போது தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் மிகுந்த அழுத்தங்களும், சர்ச்சைகளும் இருந்ததால் நீண்டகாலம் நடைபெற்றுள்ளது. அத்துடன் இந்த வழக்கு இதனுடன் முடியவில்லை. இன்னும் பல மேல்முறையீடுகள் செல்லும். அதையெல்லாம் பார்த்துக்கொள்வோம். ஆனால் இன்று நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளது. சிபிஐ தரப்பில் 100% மேல்முறையீடு செய்வார்கள். அவர்கள் மேல்முறையீடு செய்தாலும் அதையும் நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.