ரூபா ஐ.பி.எஸ் உடன் வார்த்தைப் போரிட்ட நபரின் ட்விட்டர் கணக்கு நீக்கம்: கங்கனா கொந்தளிப்பு!

ரூபா ஐ.பி.எஸ் உடன் வார்த்தைப் போரிட்ட நபரின் ட்விட்டர் கணக்கு நீக்கம்: கங்கனா கொந்தளிப்பு!
ரூபா ஐ.பி.எஸ் உடன் வார்த்தைப் போரிட்ட நபரின் ட்விட்டர் கணக்கு நீக்கம்: கங்கனா கொந்தளிப்பு!

ரூபா ஐ.பி.எஸ் உடன் வார்த்தைப் போரில் ஈடுபட்ட ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதற்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் கடுமையாகக் கொந்தளித்திருக்கிறார்.

கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசுகள் தடைசெய்யப்பட்டது. ஆனால், இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பசுமை பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என்று மாநில அரசு அறிவித்தது. பட்டாசு விவகாரத்தில் கர்நாடக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபா ஐ.பி.எஸ்ஸுக்கும், ட்விட்டர் பயனாளர் ஒருவருக்கும் வார்த்தைப் போர் வெடித்தது.

ரூபா ஐ.ஏ.எஸ் நவம்பர் 14 ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டார். அதில், ``மக்களுக்கு பட்டாசு தடை செய்வதில் ஏன் சிக்கல் உள்ளது. சில அறிவுஜீவிகள், உயர் கல்வி கற்றவர்கள் மற்றும் மரியாதைக்குரிய குடிமக்கள் இவர்களை பட்டாசு தடைக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்" எனக் கூறியிருந்தார். இந்த ஸ்டேட்டஸ்தான் சர்ச்சைகளுக்கு விதையானது.

சில மணிநேரங்களில் ரூபாவின் பதிவை டேக் செய்து அவருக்கு எதிராக பலர் கேள்விக்கணைகளை எழுப்பினர். "தீபாவளி ஒரு இந்து பண்டிகை. இந்து மத பண்டிகையிலும் வெடிக்கப்படும் வெடிபொருளை தடை செய்யும் ரூபா மற்ற மதங்களின் பழக்கவழக்கங்களையும் அவர் கேள்வி கேட்பாரா?" என்று இதை சிலர் மத ரீதியாக பேசத் தொடங்கினர். இதோடு நில்லாமல், 'ட்ரூ இந்தாலஜி' என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பயனாளர் ஒருவர், ரூபாவை குறிப்பிட்டு, "இந்தியாவின் பண்டைய வேதங்களில் பட்டாசுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுவும் இந்தப் பட்டாசுகள் வெளிச்சத்தின் அடையாளமாக காட்டப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. அதை தடை செய்வது அறியாமை" என ட்வீட் போட்டு அவரிடம் வாதிட்டார்.

இதற்கு ரூபாவும், சில இதிகாச சான்றுகளை குறிப்பிட்டு அவருடன் வாதிட்டார். கூடவே, அந்தப் பயனாளரையும் முகமற்ற மற்றும் பெயரிடப்படாதவர் என்று குறிப்பிட்டதோடு, "பட்டாசு தடையை இந்து எதிர்ப்பு என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு சமூக நடைமுறை. சமஸ்கிருதத்தில் பட்டாசு குறித்து இருப்பதை நீங்கள் காண்பிக்கலாம். ஒருவேளை இதிசாகத்தில் துப்பாக்கி துகள்கள் போன்ற சிறு வெடிகள் இருந்திருக்கலாம். ஆனால், நாம் இப்போது பேசுவது பட்டாசுகளைப் பற்றியும், அதன் தாக்கங்களைப் பற்றியும்தான்" என்று குறிப்பிட்டார். 16-ம் தேதி தொடங்கிய வார்த்தை சண்டை நேற்று இரவு வரை நீட்டித்தது.

இதற்கிடையே, 'ட்ரூ இந்தாலஜி' என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பயனாளரின் அக்கவுண்ட் தற்போது நீக்கப்பட்டது. இதனால், கூடுதல் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அக்கவுன்ட் நீக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனாவத், ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சியை கணக்கை டேக் செய்து, "அவரின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் இல்லாதபோது, அவர்களை சிறையில் அடைக்காதீர்கள். ஒருவரின் டிஜிட்டல் அடையாளத்தை நீக்குவது மெய்நிகர் உலகில் ஒரு கொலைக்கு குறைவானதல்ல, அதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும்" என்றதோடு, "சாமானியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உங்களை போன்றவர்களை அரசு நியமிக்கிறது.

உண்மையான வாதங்களை வெல்ல முடியாமல், அந்த ட்விட்டர் பயனாளரை நீக்கி பழிவாங்கிவிட்டீர்கள். யாருடைய புகாரின் அடைப்படையில் அவரை நீக்கினீர்கள். இப்படிச் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று ரூபாவை கடுமையாக சாடியதோடு, #BringBackTrueIndology என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டார். இந்த ஹேஷ்டேக் பிறகு ரூபாவுக்கு எதிராக ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com