“அடுத்தமுறை அமெரிக்க அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவார்”-கமலா ஹாரிஸின் தாய்மாமா
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தமுறை ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவார் என கமலா ஹாரிஸின் தாய்மாமா பேராசிரியர் கோபாலன் பாலச்சந்திரன் டெல்லியில் "புதிய தலைமுறைக்கு" பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தாய்மாமா பேராசிரியர் கோபாலன் பாலச்சந்திரன் டெல்லியில் "புதிய தலைமுறைக்கு" பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்... அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கமலா ஹாரிஸ் ஏற்கெனவே வெற்றி பெறுவார் என எனக்கு தெரியும். அது மிகவும் சந்தோஷம். தற்போது அமெரிக்காவில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி உள்ளது. தற்போது அமெரிக்க மக்களின் தேவை என்பது அதிபர் ட்ரம்பை விட சிறந்த ஆட்சி. அதனால் மக்கள் அதிபராக ஜோ பைடனையும், துணை அதிபராக கமலா ஹாரிஸையும் தேர்வு செய்துள்ளனர்.
அவர்கள் நிச்சயம் அமெரிக்க மக்களுக்கு சிறந்த ஆட்சியை ஒருங்கிணைத்து வழங்குவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை நெருங்கிய உடனேயே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்தேன். நிச்சயமாக அடுத்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தல் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவார். தற்போது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் பிரச்சனை குறிப்பாக கருப்பினத்தவருக்கு எதிரான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்த பிரச்னைகளை முன்வைத்து தான் அமெரிக்க மக்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு தங்களுடைய வாக்குகளை அளித்துள்ளனர்.
அதனால் நிச்சயம் இந்த பிரச்னைகள் விரைவில் தீர்வுக்கு வரும். ஜனவரி 20-ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் நிச்சயம் செல்வேன். கமலா ஹாரிஸ் இந்தியாவுக்கு முதலாவதாக அரசு முறை பயணமாக வர இருக்கிறார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவு என்பது ஏற்கெனவே வலுவானது. தற்போது அது மேலும் வலுவடையயும். கமலா ஹாரிஸ் ஏற்கெனவே சென்னை மற்றும் சண்டிகருக்கு வந்துள்ளார். அவருக்கு சென்னை வந்தது மிகுந்த சந்தோஷம் என்று அவர் தெரிவித்தார்.