கொரோனா குறித்து சர்ச்சை கருத்தால் எஃப்.ஐ.ஆர் - தகிக்கும் மத்தியப் பிரதேச அரசியல்!

கொரோனா குறித்து சர்ச்சை கருத்தால் எஃப்.ஐ.ஆர் - தகிக்கும் மத்தியப் பிரதேச அரசியல்!
கொரோனா குறித்து சர்ச்சை கருத்தால் எஃப்.ஐ.ஆர் - தகிக்கும் மத்தியப் பிரதேச அரசியல்!

கொரோனா வைரஸ் தொடர்பான கருத்தால் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது பற்றியும் சற்றே விரிவாக பார்ப்போம்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பீதியை ஏற்படுத்தியதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போபால் பாஜக மாவட்டத் தலைவர் சுமித் பச்சூரி மற்றும் இரண்டு பாஜக எம்எல்ஏக்களான விஸ்வாஸ் சாரங் மற்றும் ராமேஸ்வர் சர்மா உள்ளிட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில், கமல்நாத் மீது மீது பிரிவு 188-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டது (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்க உத்தரவிடாதது) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் ஐபிசி மற்றும் பிரிவு 54 (பேரழிவு அல்லது அதன் தீவிரம் அல்லது அளவு குறித்து ஒரு தவறான அறிவிப்பு அல்லது எச்சரிக்கையை உருவாக்குதல் அல்லது பரப்புதல்) போன்ற பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

போபாலின் குற்றப்பிரிவு காவல் நிலையம், இந்த எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது. சனிக்கிழமை உஜ்ஜைனியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், "உலகில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்திய வகை வைரஸ் என்று அறியப்படுகிறது" என்று கமல்நாத் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நெருக்கடியான இந்த தருணத்தில் கமல்நாத்தின் இந்தப் பேச்சு குழப்பத்தை உருவாக்கி, சர்வதேச அளவில் நாட்டை அவதூறு செய்வதாக பாஜக புகார் கொடுத்தது.

கொரோனாவைத் தடுப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு கமல்நாத் கீழ்ப்படியவில்லை என்றும், அவரது செயல் இந்திய தண்டனை சட்டத்தின்படி தேசத்துரோகத்திற்கு சமம் என்றும் கூறி போபால் குற்றப்பிரிவு காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளது.

இது தற்போது மத்தியப் பிரதேச அரசியலில் புதிய புயலை கிளப்பி வருகிறது. கமல்நாத் மீதான வழக்கு பதிவை அடுத்து, முன்னாள் மக்கள் தொடர்பு அமைச்சர் பி.சி.சர்மா தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு, இதே குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது கொரோனா காரணமாக மரணமடைந்த மக்களின் புள்ளிவிவரங்களை மறைத்து, குழப்பத்தை ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இதேபோல் ஒரு புகாரை இந்தூரிலும் அளித்துள்ளனர் காங்கிரஸார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. கமல்நாத் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ``நாங்கள் மக்களுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருக்கும்போது, காங்கிரஸ் நெருப்பைப் பற்றவைக்கத் தயாராக உள்ளது. இதற்கு கமல்நாத் பதிலளிக்க வேண்டும். இது ஒன்றாகப் போராட வேண்டிய நேரம், நீங்கள் இறப்புகளைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள். கமல்நாத் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்தாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா, கமல் நாத்தை ஒரு 'சீன முகவர்' மற்றும் 'துரோகி' என்று அழைத்ததுடன் அவரை சிறையில் தள்ள வேண்டும் என்றார். இதற்கு பதிலுக்கு காங்கிரஸும், கொரோனா மரண விவரங்களை வைத்து பாஜகவை தாக்க தொடங்கியிருக்கிறது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com