மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது.
மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இன்று சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் 6 நாட்களாக போராடி வந்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மம்தாவுடன் இன்று பயிற்சி மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊடகங்கள் முன்னிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக மம்தா தெரிவித்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் பணிக்கு உடனடியாக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியும் வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யா கந்த் அமர்வு, நாளை வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.