HEADLINES|ஈரானை குறித்த டிரம்ப் பேச்சு முதல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட விஜய் ரூபானி வரை!
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம். உயர் நீதிமன்ற உத்தரவால் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு.
ஈரான் தலைநகரின் வான்பரப்பை கட்டுக்குள் கொண்டுவந்ததாக இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு. தெஹ்ரானில் உள்ள செய்தி தொலைக்காட்சி ஸ்டுடியோவிலும் ஏவுகணை வீசி தாக்கியதால் பதற்றம்.
ஈரான் அணுஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு. தெஹ்ரானை விட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல்.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது போருக்கான காலம் அல்ல என பிரதமர் மோடி பேச்சு. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்த வழி என்றும் வேண்டுகோள்.
டெஹ்ரானில் இருந்து ஈரானின் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் இந்தியர்கள். ஜோர்டான், எகிப்து வழியாக இஸ்ரேலில் இருந்து வெளியேற்ற முயற்சி.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி மாறவில்லை என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் பழனிசாமி என்றும் குற்றச்சாட்டு.
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுவதே அரைவேக்காட்டுத்தனம். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
2026இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை. தேர்தலுக்கு பிறகு 5 அமைச்சர்களை நாம் வைத்திருக்க வேண்டும் என்றும் பேச்சு.
கர்நாடகாவிலிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்துக்கு தொட்டாபுரி மாம்பழங்களை அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை.மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வேண்டுகோள்.
டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கம். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் தரையிறக்கப்பட்டதாக தகவல்.
மஹாராஷ்டிரா, கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடக்கம். அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்ட மத்திய அரசு.
விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு இறுதிச் சடங்கு. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்.
பிரிட்டன் நாட்டின் உளவுத் துறையின் தலைவராக தேர்வான பிளெய்ஸ் மெட்ரேவேலி. 116 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் வரவேற்பு.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது புகார். ஆதாரங்களை சமர்ப்பிக்க புகார் தெரிவித்த மதுரை அணிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தல்.
நாம் செய்யும் வேலைகள் நிம்மதி தரும்போது, ஏன் மற்றவர்களின் கருத்துகளுக்கு கவலைப்பட வேண்டும்? இரண்டு ஆண்டுகளாக தனது திரைப்படம் வெளியாகாத போதிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நடிகை சமந்தா பேட்டி.