உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்ய கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால், அதிருப்தியடைந்துள்ள நீதிபதி கர்ணன், குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் முறையிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் நெடும்பரா, பிலிப் ஆகியோர் குடியரசு தலைவருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளனர். ஆனால் அத்தகைய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என குடியரசு தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.