ஜே.பி.நட்டா, சோனியா, எல்.முருகன் போட்டியின்றி தேர்வு! மாநிலங்களவை MPs தேர்தல் நடைபெறுவது எப்படி?

மாநிலங்களவைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜே.பி.நட்டா, சோனியா, எல்.முருகன்
ஜே.பி.நட்டா, சோனியா, எல்.முருகன்ட்விட்டர்

56 எம்.பிக்கள் பதவிக்காலம் நிறைவு: மாநிலங்களவை தேர்தல்:

மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டுடன் நிறைவடைய உள்ளது. அதில், 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், 2 மாநிலங்களைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஏப்ரல் 3ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளனர். இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய பிப்ரவரி 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி
சோனியா காந்திட்விட்டர்

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட சோனியா காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில் வயது முதுமை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த முறை ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டது. மேலும், ராஜஸ்தானில் இருந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

ஜே.நட்டா, சோனியா, எல்.முருகன் ஆகியோர் தேர்வு

இந்த நிலையில், கடந்த பிப்.14ஆம் தேதி, அவர் ராஜஸ்தானில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ராஜஸ்தானில் போட்டியின்றி சோனியா காந்தி மாநிலங்களவைக்குத் தேர்வானதை சட்டமன்ற செயலகம் முறைப்படி அறிவித்தது. ஏற்கனவே 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு போதிய எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனாலேயே அவர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளார். அதுபோல் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்: மாநிலவாரியாக காலியாகும் எம்.பிக்கள் இடங்கள்!

உத்தரப்பிரதேசம் (10), மகாராஷ்டிரா (6), பீகார் (6), மேற்கு வங்கம் (5), மத்தியப் பிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகா (4), ஆந்திரப்பிரதேசம் (3), தெலங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தராகண்ட் (1), சத்தீஸ்கர் (1), ஹரியானா (1), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு
மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வுபுதிய தலைமுறை

மாநிலங்களவை எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் இருக்கின்றன. இதில் மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அதேநேரத்தில், மாநிலங்களவைக்கு மக்கள் நேரடியாக எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியாது. மாநிலங்களவைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். அவ்வாறு முடிவடையும் எம்பிக்களின் பதவிகளுக்கு அவ்வப்போது இந்திய தேர்தல ஆணையம் தேர்தல் நடத்தும். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

இதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள் ஒரு அளவீடு மூலம் நிர்ணயக்கப்படுகிறது. உதராணமாக, தற்போது ஒரு மாநிலத்தில் 234 எம்.எல்.ஏக்கள் மற்றும் அம்மாநிலத்திற்கு 6 காலியிடங்கள் மாநிலங்களையில் உள்ளது என்றால் வெற்றிக்கு தேவையான வாக்குகள் என்பது 34 எம்எல்ஏக்களின் வாக்குகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238 பேர் தேர்தல் மூலமும் மீதமுள்ள 12 பேர் நியமனம் மூலம் எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும். அதாவது, 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களில் நியமனம் செய்யப்படும் எம்பிக்கள் 12 பேர் கலை, இலக்கியம் மற்றும் சமூகச் சேவை ஆகியவற்றில் சிறந்தவர்களாக விளங்கியிருக்க வேண்டும் என்பது விதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com