''துணிக்கடையில் உடை மாற்றும் போது வீடியோ'' - பெண் பத்திரிகையாளர் புகார்!
துணிக்கடையில் உடை மாற்றும்போது கடை உரிமையாளர் வீடியோ எடுத்து பார்த்ததாக 27 வயது பெண் பத்திரிகையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், “டெல்லி எம்.பிளாக் மார்க்கெட்டில் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நான் துணி வாங்க சென்றேன். அப்போது சில துணிகளை எடுத்துக்கொண்டு அதை போட்டு பார்க்க வேண்டும் என அங்கிருந்த பெண் ஊழியரிடம் கேட்டேன். அவர் ஒரு அறையை காட்டினார். அங்கு சென்று நான் உடை மாற்றினேன்.
10 நிமிடத்திற்கு பிறகு வந்து கதவை தட்டிய பெண் ஊழியர் ஒருவர் அருகில் இருக்கும் அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். நான் அங்கு ஏதும் தவறு இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கிருந்த ஊழியர்களிடமும் கேட்டேன். அங்கு கேமரா இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இங்கு கேமரா இருக்கிறது என்றால் எதற்கு என்னை இந்த அறையில் உடை மாற்ற அனுப்பினீர்கள் என்று கடை உரிமையாளரிடமும் ஊழியர்களிடமும் கேட்டேன். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை. நான் போலீசை கூப்பிடுகிறேன் என்று சொன்ன பிறகு கடை உரிமையாளர் அவரது மகனை அழைத்து அந்த வீடியோவை நீக்கம் செய்ய சொன்னார்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் ஐபிசி 354 சி பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்