அசைவ உணவு விவகாரம்: இடதுசாரி-ஏபிவிபி மாணவர்கள் மோதல்.. போர்க்களமான ஜேஎன்யு பல்கலைக்கழகம்

அசைவ உணவு விவகாரம்: இடதுசாரி-ஏபிவிபி மாணவர்கள் மோதல்.. போர்க்களமான ஜேஎன்யு பல்கலைக்கழகம்
அசைவ உணவு விவகாரம்: இடதுசாரி-ஏபிவிபி மாணவர்கள் மோதல்.. போர்க்களமான ஜேஎன்யு பல்கலைக்கழகம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களிடையே இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ராம நவமியை முன்னிட்டு நேற்று இரவு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது அங்கு இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதனிடையே, அசைவ உணவுக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ஏபிவிபி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஜேஎன்யு பல்கலைக்கழகத்துக்கான ஏபிவிபி அமைப்பின் தலைவர் ரோகித் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "அசைவ உணவுகளுக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கல்லூரி விடுதியில் நடக்க இருந்த ராமநவமி பூஜையை சீர்குலைக்க இடதுசாரி மாணவர் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. விடுதியில் ஒரே நேரத்தில் இஃப்தாரும், பூஜையும் நடைபெற்றன. அப்போது ராம நவமி கொண்டாடுவதற்கு இடதுசாரியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எங்கள் மீதும் தாக்குதலும் நடத்தினர்" என அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த மோதல் சம்பவத்துக்கு ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

- விக்னேஷ் முத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com