தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள ஜிக்னேஷ் மேவானி
குஜராத் தேர்தலில் வட்காம் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜிக்னேஷ் மேவானி அனைவரும் கவனிக்கக்கூடிய தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார்.
தலித் அதிகார் மஞ்ச் இயக்கத்தின் தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருபவருமான ஜிக்னேஷ் மேவானி குஜராத் தேர்தலில் வட்காம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார். பாஜகக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவும் இருந்தது. ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அங்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வட்காம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் அவர்கள் வேட்பாளரை அறிவிக்கவில்லை. வட்காம் தொகுதியில் பாஜகவுக்கும், ஜிக்னேஷ் மேவானிக்கும் இடையே நேரடி போட்டி காணப்பட்டது. தற்போது சுமார் 18,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்து ஜிக்னேஷ் வெற்றி பெற்றுள்ளார். எந்தக் கட்சியின் சார்பாகவும் இல்லாமல் சுயேட்சையாக களம் கண்டு ஜிக்னேஷ் மேவானி வெற்றியை தன் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

