வயிற்று வலிக்கு ஆணுறையை பரிந்துரை செய்த மருத்துவர் நீக்கம்!
வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மருந்துசீட்டில் ஆணுறையை எழுதிக் கொடுத்த டாக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காட்சிலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் அஸ்ரஃப். கடந்த ஜூலை மாதம் வயிற்று வலிக்காக, 55 வயது பெண் ஒருவர், இவரிடம் சிகிச்சைக்கு வந்தார். உடனடியாக மருந்து சீட்டில் நிரோத் என்று எழுதி, மருந்துகடையில் வாங்கிக்கொளுங்கள் என்று கொடுத்துள்ளார். மருந்துகடையில் அந்த சீட்டை கொடுத்தபோதுதான், அதில் எழுதப்பட்டிருந்தது காண்டம் என்று அந்த பெண்ணுக்குத் தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம், மாநில சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. பின்னர் இதை விசாரிக்க, 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விசாரித்து, அந்த மருத்து வர் அப்படி எழுதியது உண்மைதான் என்று அறிக்கை சமர்பித்தது. இதையடுத்து அவரை நீக்க மாநில சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அவர் நீக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் அஷ்ரப் மீது தவறாக நடந்துகொண்டதற்காகவும் செவிலியர்களை அவமானப்படுத்தியதற்காகவும் ஏற்கனவே சில முறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.