‘இறந்துவிட்டாலும் என் மகள் இந்த உலகத்தை பார்ப்பாள்’ நெகிழ வைத்த பெற்றோர்..!
விபத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் கண்களை தானம் செய்த பெற்றொருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா - சுலேகா தம்பதி தங்களுடைய 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக கீழே விழுந்துள்ளது. பலத்த காயம் அடைந்த குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.
இதனை அடுத்து தங்களது குழந்தையின் கண்களை தானம் செய்ய சந்திரா - சுலேகா தம்பதி முன்வந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த சுலேகா, இறந்துவிட்டாலும் என் மகள் இந்த உலகத்தை பார்ப்பாள். நாங்கள் எங்கள் கண்களை தானம் செய்யத்தான் முடிவு செய்திருந்தோம். ஆனால் இரண்டு வயதுக்கு முன்னதாகவே எங்கள் மகளின் கண்களை தானம் செய்ய நேரிடும் என எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் இரண்டு குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
குழந்தை இறந்த சோகத்திலும் கண்களை தானம் செய்த சந்திரா - சுலேகா தம்பதிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.