ஏப்ரல் மாதத்திற்குள் சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படும் - ஜெட் ஏர்வேஸ் உறுதி
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள், நிலுவையிலுள்ள அனைத்து சம்பள தொகையும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மூத்த அதிகாரிகளுக்கும் விமானிகளுக்கும் சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 14 விமானங்களின் சேவைக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதற்கு விமானிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இதுகுறித்து தெளிவு படுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சம்பள பாக்கி பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் 2 ஆம் தேதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தது.
தங்கள் நிறுவனத்துக்குக் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் ஆதரவை தங்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர்களின் குறைகளை நேரடியாகவும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலமும் அறிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள், நிலுவையிலுள்ள அனைத்து சம்பள தொகையும் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து ஏர்வேஸ் தலைமை அதிகாரி ராகுல் தனஜா ஊழியர்களுக்கு அனுப்பிய இ- மெயிலில், “விமானத்துறைகளை இயக்குவது சவாலான ஒன்று. அதில் ஜெட் ஏர்வேஸ் விதிவிலக்கல்ல. இந்த நிலையிலும் நிறுவனத்தின் நிலையை புரிந்து கொண்டு எப்போதும் எங்களுக்கு உதவியாக கைக்கோர்த்து நிற்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது கடமைகளை மதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. செப்டம்பர் மாதத்தின் எஞ்சிய 25 சதவீத சம்பளம் இன்று வழங்கப்படும். மீதமுள்ள அனைத்து நிலுவை சம்பளங்களும் நிலுவைத்தொகையும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். நிறுவனம் ஊழியர்களுக்கும் எல்லா நேரங்களிலும் கடமைப்பட்டு இருக்கிறது”. என தெரிவித்துள்ளார்.