கவுதம் காம்பீரைத் தொடர்ந்து மற்றொரு பாஜக எம்.பியும் அரசியலில் இருந்து விலகல்.. இதுதான் காரணமா?

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரைப் போன்று மற்றொரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹாவும், தம்மை அரசியலில் இருந்து விடுவிக்குமாறு ஜே.பி.நட்டாவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கவுதம் காம்பீர், ஜெயந்த் சின்ஹா
கவுதம் காம்பீர், ஜெயந்த் சின்ஹாட்விட்டர்

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் எல்லாக் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளைப் பிரித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர், மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த இருப்பதால் அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதேபோன்று, முன்னாள் அமைச்சரும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் தொகுதியின் பாஜக எம்பியுமான ஜெயந்த் சின்ஹாவும், ’வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால் அதில் முழுமையாகக் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் நிர்வாக விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். கடந்த 10 ஆண்டுகளாக ஹசாரிபாக் மக்களுக்குச் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும், எனக்குக் கட்சியில் பல வாய்ப்புகளை அளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவினர் அனைவருக்கும் இந்தச் சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெயந்த் சின்ஹா
ஜெயந்த் சின்ஹா

ஒரே நாளில் இருவரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர்கள் சொந்த துறையில் கவனம் செலுத்த இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும், வரவிருக்கும் 2024 தேர்தலில் அவர்களுக்கு மீண்டும் தொகுதிகள் வழங்கப்படாது என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டதாலேயே அவர்கள் அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இன்று பாஜக 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com