பாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா: ராம்பூர் தொகுதியில் போட்டி?
நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் இணைகிறார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியில் இருந்த அவர், சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அதில் இருந்து விலகி சமாஜ் வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2010-ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறினார். பின் அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில், பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த தொகுதியில், சமாஜ்வாதி தரப்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் போட்டியிடுகிறார். சமாஜ்வாதியில் இருந்து ஜெயப்பிரதாவை வெளியேற்றியதில் ஆசம்கானுக்கு முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.