“கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை” - காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர்
விவாதங்களால் பதில் சொல்ல தெரிந்த எங்கள் மீது இரும்பு கம்பி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
தலையில் கட்டுப் போட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அய்ஷி கோஷ், “இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். துணை வேந்தர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி குண்டர்களால் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 4-5 நாட்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பேராசிரியர் மற்றும் ஏபிவிபியை சேர்ந்தவர்களால் வளாகத்தில் வன்முறை தூண்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல் ஆகியவற்றை பயன்படுத்தி முகமூடி அணிந்துவந்து தாக்குதல் நடத்தினர். விவாதம் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் மட்டுமே பதில் பேசக் கூடிய மாணவர்கள் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை. வன்முறை என்பது ஜேஎன்யு கலாச்சாரம் இல்லை. ஜேஎன்யு தன்னுடைய ஜனநாயக கலாச்சாரத்தை உறுதி செய்யும்” என்று கூறினார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் டெல்லியில் உள்ள ரைசினா சாலையில் இருந்து இந்தியா கேட் நோக்கி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றனர். இது ஒருபுறம் இருக்க, இந்தத் தாக்குதலே, ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் மற்றும் அவரது நண்பர்கள் தலைமையில்தான் நடத்தப்பட்டதாக ஏபிவிபி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இவர்களும் காயமடைந்த நிலையில் பேட்டியளித்துள்ளனர்.