முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நாள் இன்று
‘ஜன கன மண’ தேசிய கீதம் பல்லாண்டுகளாக இந்தியாவை ஈர்த்து மக்களை ஒன்றிணைத்து வருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
‘ஜன கன மண’ தேசிய கீதம் முதன்முதலாக இசைக்கப்பட்ட நாள் இன்று. 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
1950 ஆம் ஆண்டு ஜனவரியில்தான் ‘ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாக இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது. தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும் தேசிய கீதம் ஒலியிலும் வந்தன.
இந்நிலையில் தேசிய கீதம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “‘ஜன கன மண’தேசிய கீதம் பல்லாண்டுகளாக இந்தியாவை ஈர்த்து மக்களை ஒன்றிணைத்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் வங்க மக்களின் பங்களிப்பை போற்றும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.