மூன்றாண்டு பாஜக ஆட்சி குறித்து கருத்துக் கேட்கும் திட்டத்திற்கு ‘ஜன் கி பாத்’ என்று பாஜக பெயரிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், ‘மன் கி பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், ‘மன் கி பாத்’ போலவே, தற்போது ‘ஜன் கி பாத்’ என்ற ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, வரும் 26-ஆம் தேதி முதல், ஜூன் 15-ஆம் தேதி வரை மக்களைச் சந்தித்து, பாஜக ஆட்சி குறித்து கருத்து கேட்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு ‘ஜன் கி பாத்’ என்று பெயரிட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக முதல்வர்கள் உட்பட 450-க்கும் மேற்பட்டோர், நாடு முழுவதும் சென்று கருத்து கேட்க உள்ளனர்.
சொந்த மாநிலம் அல்லாத பிற மாநிலங்களுக்குச் சென்றும், பாஜக தலைவர்கள் கருத்து கேட்க உள்ளனர். அதன்படி மோடி கவுஹாத்தியிலும், அமித்ஷா கேரளாவிலும் கருத்து கேட்க உள்ளனர். பாஜக முதல்வர்கள் பெரும்பாலும், அவர்கள் ஆட்சியமைக்காத மாநிலங்களில் கருத்து கேட்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.