மணிப்பூர் வன்முறை: மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்ப மத்திய உள்துறை முடிவு.. யார் இந்த ராகேஷ் பல்வால்?

மணிப்பூரில் தொடரும் வன்முறை காரணமாக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்குத் திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் வன்முறை, ராகேஷ் பல்வால்
மணிப்பூர் வன்முறை, ராகேஷ் பல்வால்ட்விட்டர்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த  வன்முறை!

குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

manipur violence
manipur violencepti

பதற்றம் நிறைந்த மாநிலமாக மணிப்பூர் அறிவிப்பு!

இதனிடையே மாணவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு அதிகாரம் அனைத்தும் உச்சவரம்பில் இருக்கும் எனவும், 19 காவல் எல்லைகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்த பகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு துணை ராணுவப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை திரும்ப் அனுப்ப முடிவு!

இந்த நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்குத் திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்ணிப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் பல்வாலை முன்கூட்டியே அவரது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில் அவர் பணியாற்ற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை காரணமாக அங்கு கூடுதல் அதிகாரிகளின் தேவையைக் காரணம் காட்டி உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒரு மாதத்துக்கு பின்னர், அமைச்சரவையின் நியமனக் குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ராகேஷ் பல்வால்
ராகேஷ் பல்வால்twitter

யார் இந்த ராகேஷ் பல்வால்?

ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் பல்வால், மணிப்பூர் கேடரைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்காணிப்பாளராக (SSP) பொறுப்பேற்றார். இதற்குமுன், அவர் 2018ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அங்கு அவர் நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்தார். 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிலும் பல்வால் உறுப்பினராக இருந்தார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com