ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக் கைது
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் முகமது யாசின் மாலிக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஐநா ராணுவ கண்காணிப்புக் குழுவின் முகாமை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்ட ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுள் ஒருவரான முகமது யாசின் மாலிக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். மாலிக் கைது செய்யப்பட்டு கோதிபாக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐநா ராணுவ கண்காணிப்புக் குழு காஷ்மீரின் சூழல் குறித்து கண்காணிப்பதற்காக ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாசின் மாலிக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டப் பேரணி நடத்த யாசின் மாலிக் திட்டமிட்டிருந்தார். உலக மனித உரிமைகள் தினமான இன்று பேரணிக்கு அழைப்பு விடுத்ததால், ஸ்ரீநகரில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் மூத்த பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் மற்றும் சையது அலி கிலானி ஆகியோர் முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.