காஷ்மீர் விவகாரம்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
காஷ்மீரில் பதட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்துவருகிறது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப் பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ் மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறைச் செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நாடாளுமன்ற தொடர் முடிவடைந்த பின் அமித் ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் இப்போது நடந்து வருகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.