ரஜோரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரிலுள்ள ரஜோரி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா விமானப் படை தாக்குதல் நடத்தியது. அதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அகற்றப்பட்டன. இதனையடுத்து இருநாடுகள் இடையே பதட்டம் நிலவி வந்தது. அத்துடன் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவந்தது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இன்று நடந்த தூப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரஜோரியின் சுந்தர்பானி செக்டாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான யாஷ் பவுல் வீரமரணம் அடைந்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் ராணுவம் பால்லான்வாலா, ஜோக்வான் மற்றும் கேரி பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை ரஜோரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் பலியடைந்துள்ளார். அத்துடன் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தச் சூழலில் இன்று மற்றொரு ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தான் இராணுவம் 110 முறைக்கு மேல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.