காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..!
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். 

லடாக் யூனியன் பிரதேசத்தில், கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மாநிலங்களவையில் இருக்கும் நான்கு எம்பிக்கள், இனி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் பதவி காலத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

அதேபோல மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு 5 இடங்களும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட்டாலும் இவர்களின் பதவிக்காலம் 2019-ஆம் ஆண்டு மக்களவையின் பதவிக்காலமாகவே இருக்கும். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், சட்டப்பேரவைக்கு 107 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பெண்களை, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் சட்டப் பேரவைக்கு நியமனம் செய்யலாம். அத்துடன் ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். 

மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அத்துடன் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது ஜம்மு-காஷ்மீரின் சட்ட மேலவை கலைக்கப்பட்டுவிடும். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, மாநில பட்டியலில் உள்ள காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய இரண்டையும் தவிர மீதமுள்ள அனைத்திலும் சட்டம் இயற்ற முடியும். 

ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் இனி இரு யூனியன் பிரதேசத்திற்கும் பொதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் 106 சட்டங்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்த மசோதா மூலம் அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமலில் இருந்த மாநில சட்டங்களில் 166 சட்டங்கள் இந்த இரு யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com