காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அலுவலகங்களுக்கு சீல்!

காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அலுவலகங்களுக்கு சீல்!

காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி அலுவலகங்களுக்கு சீல்!
Published on

காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து காஷீமீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

பின்னர் அவர்களை கைது செய்து, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை 12 நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, அங்கு செயல்பட்டு வரும் ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்துக்கு தடை விதித்தது. 

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் மாநிலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அந்த இயக்கத்துக்கு ஐந்து வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு நெருக்கமான இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜமாத் இ இஸ்லாமி இயக்க அலுவலகங்களுக்கும் அந்த அமைப்பின் நிறுவனங்களுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே வங்கிகணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் இப்போது அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து மெகபூபா முஃப்தியும் அவரது கட்சித் தொண்டர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com