ஜெய்ப்பூர் டேங்கர் லாரி விபத்தில் 14 பேர் பலி: தீயில் எரிந்த வரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் உடலில் தீயுடன் நடந்த படி உதவி கோரியவரை காப்பாற்றாமல் மக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் பாங்க்ரோட்டோ பகுதி டிபிஎஸ் பள்ளி அருகே உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரியுடன் காஸ் டேங்கர் லாரி பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் டேங்கர் மூடி திறந்து கொண்டதில், சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு காஸ் பரவியது. லாரியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் வரை அடர்ந்த பனிமூட்டம் போல காஸ் சூழ்ந்தது. அதன் பிறகு, டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், சாலையில் அதன் அருகே நின்றிருந்த 40-க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், பேருந்து பயணிகள், அருகே இருந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த 35 பேர், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மனிதம் எங்கே போனது?
டேங்கர் லாரி வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், அந்த சாலையில் 32 வயதான ராதேஷ்யாம் என்பவர் தனது பணியினை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். திடீரென்று லாரி விபத்துக்குள்ளான நிலையில். நிலமையின் தீவிரத்தை உணர்ந்த ராதே ஷ்யாம், தனது பைக்கிலிருந்து குதித்து எதிர்திசையில் ஓட ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் லாரியிலிருந்து வெளிப்பட்ட காஸானது இவரின் மீது பரவியதில், இவர் உடலிலும் தீயானது பற்றிக்கொண்டு இருக்கிறது, இருப்பினும் உதவி கோரிய நிலையில் அந்த சாலையில் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு உடலில் பரவிய தீயுடன் நடந்துள்ளார். ஆனால் அங்கிருந்த சிலர் ராதேஷ்யாமிற்கு உதவிசெய்ய நினைக்காமல் நடந்த விபத்தை வீடியோ எடுத்துக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்துள்ளனர்.
ராதே ஷ்யாம் ஒருவரை அழைத்து, தனது சகோதரின் எண்ணைக் கொடுத்து உதவிக்கு வரச்சொல்லி இருக்கிறார். அந்த நபரும், ராதேஷ்யாமின் சகோதரரான அகேராமிற்கு போன் செய்து, நீங்கள் உடனடியாக ஹீராபுரா பேருந்து நிறுத்தத்திற்கு வாருங்கள் உங்கள் சகோதரர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியதைக்கேட்டு அதிர்ந்த அகேராம், அருகினில் இருந்தவர்களின் துனையுடன் ஹீராபுரா பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.
அங்கு அவர் கண்ட காட்சியானது மிகவும் கொடுமையான ஒரு சம்பவமாக இருந்துள்ளது. நடு ரோட்டில் உடம்பில் தீக்காயங்களுடன் தனது சகோதரன் ராதேஷ்யாம் கிடந்துள்ளார். அகேராம் ஆம்புலன்ஸுக்கு காத்திராமல் தனது சகோதரனை காரில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளனர். எப்படியாவது ராதேஷ்யாமை காப்பாற்றிவிடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், 85% தீக்காயங்களால் ராதேஷ்யாம் இறந்ததாகக்கூறப்படுகிறது.
மொபைல் மோகத்தால், உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல், வீடியோ எடுக்கும் அளவிற்கு மனிதனின் மனதானது மரணித்துக்கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியானது எழுந்துள்ளது.