பூரி ஜெகநாதர் கோயில் கருவறைச் சாவிகள் மாயம்: விசாரணைக்கு உத்தரவு!
புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவிகள் மாயமானதை அடுத்து நீதி விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட் டுள்ளார்.
ஒடிசாவில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது, பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோயில். இந்த கோயிலின் கருவூல அறையில் ஜெகநாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில், இந்த கருவூல அறையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. பத்துபேர் கொண்ட குழு ஆய்வு செய்ய முற்பட்டது. அப்போது, கருவூலத்தின் உள் அறையில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான சாவிகள் காணாமல் போனது தெரியவந்தது.
ஜூலை 14-ம் தேதி பூரி ஜெகநாதர் கோயிலின் பிரசித்திப்பெற்ற ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் கருவூலச் சாவிகள் மாயமான சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.