மாநிலங்கள் VS மத்திய அரசு: பினராயியை அடுத்து ஜெகன்... - தீவிரமாகும் தடுப்பூசி விவகாரம்

மாநிலங்கள் VS மத்திய அரசு: பினராயியை அடுத்து ஜெகன்... - தீவிரமாகும் தடுப்பூசி விவகாரம்
மாநிலங்கள் VS மத்திய அரசு: பினராயியை அடுத்து ஜெகன்... - தீவிரமாகும் தடுப்பூசி விவகாரம்

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட சில மாநில முதல்வர்களுக்கு நீண்ட நெடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "கொரோனா 2ஆம் அலை நிலவி வரும் இந்த நேரத்தில், மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கடமையிலிருந்து மத்திய அரசு விலகிக்கொள்ள முயல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயல். தற்போதைய நிலையில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யும் சுமை முழுவதுமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகள் சொல்ல முடியாத அளவு நிதி நெருக்கடியில் உள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை நாங்களே பெற்றுக்கொள்ளலாம் என நினைத்தால் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள மறுக்கின்றன. எனவே போதிய தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வலியுறுத்த வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் இதே கருத்தை வலியுறுத்தி கேரளா முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல மாநில முதல்வர்களுக்கு ஆந்திர முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். "கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் இந்தியா தற்போது அதிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே, தற்போது செய்து வரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளமால் மேலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதனை எதிர்க்க தடுப்பூசி மட்டுமே நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. எனினும் இந்த வேகம் போதாது. இன்னும் வேகமாக சுகாதார பணிகளை, தடுப்பூசி போடும் பணிகளை செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதற்கு காரணம், மாநில அரசின் கீழ் நாம் தடுப்பூசி நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி தடுப்பூசிகளைப் பெற்று மக்களுக்கு விலையில்லாமல் செலுத்தி வருகிறோம். ஆனால், நாம் தனியாகத் தடுப்பூசிக்கு ஒப்பந்தம் கோரினால் எந்த நிறுவனமும் ஒப்பந்தம் கோர முன்வரவில்லை. மத்தியில் இருக்கும் அரசும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை முறையாக வழங்கவில்லை. இதனால் தடுப்பூசி விவகாரம் மாநிலங்கள் VS மத்திய அரசு என்று மாறியிருக்கிறது. தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தான் வைத்துள்ளது.

இதேபோல் தடுப்பூசி கொள்முதல் அதிகாரமும் நம்மிடம் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நாம் ஒன்றாக கவனம் செலுத்தி ஆக வேண்டும். மாநில முதல்வர்கள் என்ற முறையில் இந்த விவகாரத்தில் நாம் ஒருமித்த குரலில் மத்திய அரசை வலியுறுத்தி முழு பொறுப்பேற்றுக் கொள்ளும்படி சொல்ல வேண்டும். தற்போதைய தேவையாக தடுப்பூசி இருப்பை உறுதி செய்வதே உள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது. இதற்காக மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவை வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மாநில முதல்வர்கள் என்ற முறையில் நாம் ஒருமித்த குரலில் இந்த விவகாரத்தை வலியுறுத்துவோம். இந்தியா கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதை உறுதி செய்வோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக இதே கோரிக்கையை, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மற்ற மாநில முதல்வர்களை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com