'மதிய உணவு தாமதம்' - பிரதமர் பதவியேற்பு விழாவை தவறவிட்ட இரு முதல்வர்கள்!
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஆந்திர முதல்வரும், தெலங்கானா முதல்வரும் பங்கேற்காதது குறித்து தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்தவெளிப்பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், ராகுல்காந்தி, மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ரஜினிகாந்த், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பல முதலமைச்சர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உட்பட 8000 பேர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே திட்டமிட்டப்படி நேற்றைய தினம் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்பு சந்திரசேகர ராவையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் தன் வீட்டுக்கு மதிய உணவுக்காக ஜெகன் மோகன் அழைத்துச் சென்றார்.
மதிய உணவுக்கு பிறகு தனி விமானம் மூலம் டெல்லி செல்ல ஜெகன் மோகனும், சந்திரசேகர ராவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதிய உணவு முடிய 2.30 மணி ஆகிவிட்டது. இரு முதலமைச்சர்களும் டெல்லி புறப்பட தயாரான போது, தனி விமானம் புறப்பட்டு டெல்லி வர முடியாது என்றும், பிரதமர் பதவியேற்பால் தனி விமானம் தரையிரங்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து வர்த்தக விமானம் மூலம் டெல்லி செல்ல இரு முதல்வர்களும் திட்டமிட்டனர். ஆனால் கால தாமதம் ஆனதால் பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாது என விமான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஆந்திர முதல்வரும், தெலங்கானா முதல்வரும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாமல் போனது.