பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தேசியத் தலைவராக இருந்துவந்த அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பாஜகவின் உட்கட்சி விதிபடி, அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் அக்கட்சியின் தலைவராக இருக்க முடியாது என்பதால், அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் அடுத்த தேசியத் தலைவராக நட்டா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நரேந்திர மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஜே.பி.நட்டா என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அமித் ஷா தலைவர் பதவியை இழந்தாலும், அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.

