திருமண தினத்தன்று பணிநீக்கம்: ஆசிரிய தம்பதிக்கு தனியார் பள்ளி அளித்த பரிசு
ஜம்மு காஷ்மிரில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரிய தம்பதியினரை பள்ளி நிர்வாகம் அவர்களது திருமணம் நடக்கும் நாளில் பணிநீக்கம் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாரிக் பத், சுமாயா பஷீர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு முன்பு காதல் உறவுமுறையில் இருந்தாக கூறி பள்ளி நிர்வாகம் இவர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது. இவர்கள் காதல் செய்வது பள்ளிக்கு நல்லதல்ல. இங்கு சுமார் 2,000 மாணவர்களும், 200 பணியாளர்களும் உள்ளனர். இதுபோன்ற செயல் இங்குள்ள மாணவர்களை பாதிக்கும் என பள்ளி நிர்வாகம் கூறியது.
இதுகுறித்து தாரிக் பத் கூறுகையில், பெற்றோர்கள் மூலம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இது பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரியும். திருமணம் முடிவானதை அடுத்து சுமாயா சக பணியாளர்களுக்கு விருந்தும் அளித்துள்ளார். பள்ளி நிர்வாகம் காதலிப்பாதாக கூறி பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தர நிர்வாகம் அனுமதிக்காதது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணத்திற்காக விடுப்பு கோரியிருந்தோம். பள்ளி நிர்வாகமும் விடுப்பு அளித்தது. பள்ளி நிர்வாகம் கூறுவதைப்போன்று நாங்கள் காதலித்தாலும் அது எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு தானே நடந்துள்ளது. நாங்கள் எந்த பாவமும் செய்யவில்லை; எந்த குற்றமும் செய்யவில்லை. பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் எங்களை களங்கப்படுத்துவதாக பத் கூறுகிறார்.