காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பு வாபஸ்!
புல்வாமா தாக்குதலை அடுத்து காஷ்மீரில், பிரிவினைவாதத் தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தக் கொடூர தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெறுபவர்களுக்கான பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரிவினைவாத தலைவர்களான மீர்வாய்ஜ் உமர் பரூக், ஷபீர் ஷா, அப்துல் கனி லோன், பிலால் லோன் மற்றும் ஹாசிம் குரேஷி ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற, காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் அவர்களுக்கு வழங்கப்பட்ட, அனைத்து பாதுகாப்பும் வாகனங்களும் திரும்ப பெறப்பட இருக்கிறது. அரசால் வேறு ஏதும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதுவும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.