“மீண்டும் இந்தியா திரும்புவதற்கு பெருமை படுகிறேன்” - இவான்கா ட்ரம்ப்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்புவதற்கு பெருமை படுகிறேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இவான்கா ட்ரம்ப் கலந்து கொண்டார். அப்போது மோடியின் சாதனை அசாதாரணமானது என புகழ்ந்தார். மேலும், மாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு கண்காட்சிகளை மோடியும் இவான்காவும் பார்வையிட்டனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அஹமதாபாத்தில் மோட்டேரா மைதானத்தில் பிரமண்டமாய் நடைபெற உள்ள “நமஸ்தே ட்ரம்ப்“ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அதன்பின் மாலை 4.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட உள்ளார். டொனல்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தாஜ்மஹாலை சுமார் 30 நிமிடங்கள் பார்வையிட உள்ளனர். ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் நேரத்தில், இவான்கா இரண்டாவது முறையாக இந்தியா வரவுள்ளார்.
இந்தியா வருகை குறித்து ட்ரம்பின் மகள் இவான்கா தனது ட்விட்டரில், “ஹைதராபாத்தில் நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஒற்றுமையாக இருப்பதை கொண்டாடுவதற்கு எனது குடும்பத்தினருடன் மீண்டும் இந்தியா திரும்புவதில் பெருமை படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

